சென்னையில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்ந்த கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த தண்ணீரில் ஆர்வமிகுதியால் பலர் குளித்து வருவதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து சென்னை மாவட்டத்தின் ஆறு, கால்வாய்களில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள், சிறுவர்கள் அங்கு சென்று குளிக்க வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: அண்மையில் பெய்த மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு, கூவம் ஆறு, ஓட்டேரி நல்லா கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் கால்வாய் ஆகியவற்றில் அதிக அளவிலான தண்ணீர் செல்கிறது.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட ஆறுகள், கால்வாய்களில் குளிப்பது, தண்ணீர் எடுத்துச் செல்வது, தண்ணீரின் அளவை வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் ஆற்றின் கரையோரங்களுக்குச் செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.
மேலும், இது குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள் மூலம் ஆறுகள், கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.English summary-Chennai collector advises people not bath in river & lakes during this heavy downpour