சென்னை மக்களுக்கு ஓய்வு எடுக்கவும், வாக்கிங் செல்லும் பெருமளவு உதவியாக உள்ள பூங்காக்களை தத்தெடுத்து பராமரிக்க சமூக ஆர்வமுள்ளவர்களும், தனியார் நிறுவனங்களும் முன்வரலாம் என பெருநகர மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 503 பூங்காக்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி பராமரிக்கவும், புதிய பூங்காக்களை உருவாக்கி பராமரிக்கவும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், பொது நலச் சங்கங்கள் பூங்காக்கள் முன்வரலாம் என பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பெருநகர மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சேய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க முன் வருபவர்கள் பிணை வைப்புத் தொகையாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 வீதம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். புதிதாக பூங்காக்கள் உருவாக்கி, பராமரிக்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மன்றத்தின் ஒப்புதலுடன் முதல் கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அனுமதியும், மாநகராட்சி மூலம் உருவாக்கப்பட்ட பூங்காக்களுக்கு ஓராண்டு அனுமதியும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும், சரியான முறையில் பராமரிக்கப்படின், ஒவ்வொரு ஆண்டும் ஆணையருக்கு விண்ணப்பித்து, மன்றத்தின் அனுமதி பெற்று புதுப்பித்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெயரால் மாநகராட்சி பூங்கா, விளையாட்டுத்திடல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அனுமதி பெறப்பட்ட பூங்காக்களில் ஏற்கெனவே மன்றம் எவ்வளவு விளம்பரம் வைக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளதோ, அதன்படி ஆணையரின் அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கலாம். மேலும், இவற்றில் நான்கில் ஒரு பங்கில் மாநகராட்சியின் வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும். விளையாட்டுத் திடல்களில் இளைஞர்கள், சிறார்களின் உள்ளத்தையும் உடலையும் வலுப்படுத்தும் வகையிலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தொழில்நுட்ப விளையாட்டு சாதனங்கள் நிறுவப்பட்டு பராமரிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்கள், விதிகள், நிபந்தனைகளை சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பெருநகர மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Chennai Corporation call for to adopt the Chennai Park.