சென்னை மாநகரப் பகுதியில் டெங்கு கொசு அதிகம் உற்பத்தி யாகும் வீடுகளுக்கு ‘ரெட் அலர்ட்’ நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
டெங்கு கொசு உற்பத்தியும், டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக் கப்படுவதும் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில்தான் அதிகம் காணப்படுகிறது. நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கும் வகையிலான டயர், தொட்டி போன்ற தேவையற்ற பொருட்கள் கிடப்பதே இதற்கு காரணம் என்று சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
இதனால் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி யதில் இருந்தே சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை அழிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதனால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி விக்கிறது.
தவிர, சென்னையில் உள்ள வீடுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொது மக்களுக்கு ‘ரெட் அலர்ட்’ நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு அதிக அளவாக 550 பேர் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டனர். 2017-ம் ஆண்டு 400 பேர் பாதிக்கப்பட்ட னர். சென்னையில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த கோடைகாலம் மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடு படுத்தப்பட்டனர். அந்த பணி தொடர்ந்து நடக்கிறது.
மேலும், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டுபிடிக்கப் பட்டு, ரூ.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த 6,200 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 10 என்ற அளவில் உள்ளது.
ஆய்வின்போது, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியானால் மட்டுமே அபராதம் விதிக்கப்படு கிறது. வீடுகளில் கொசு உற்பத்தி இருந்தால், வீட்டு உரிமையாளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதிக அளவு கொசுப் புழுக்கள் காணப்படும் வீடுகளுக்கு ‘ரெட் அலர்ட்’ நோட்டீஸ், கொசுப் புழுக்கள் உற்பத்தியாக வாய்ப் பிருக்கும் வீடுகளுக்கு ‘யெல்லோ அலர்ட்’ நோட்டீஸ் வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.