சென்னை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரிகளை கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் மும்முரமாக பல்வேறு வகைகளில் வசூல் செய்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி, சொத்துவரி வசூலை ரூ.1,000 கோடியாக உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் உள்ள சொத்துகளை மறு மதிப்பீடு செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், சொத்து வரி திருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், பல வருடங்களாக சொத்து வரி உயர்த்தவில்லை என்பதையும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் சொத்து வரி விதிப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகவும், குறிப்பாக விரிவாக்க பகுதிகளில் அதிகமாகவும், பழைய மாநகராட்சி பகுதிகளில் அதை விட குறைவாகவும் வரி வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பழைய மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் வரிகளை விட அதிகளவில் வரி செலுத்தி, அடிப்படை வசதிகளில் ஒன்று கூட இல்லாமல் நாங்கள் ஏன் திண்டாட வேண்டும் என, விரிவாக்க பகுதிவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதேநேரம், சென்னையின் ௧௫ மண்டலங்களிலும், ஒரே விதமான சொத்துவரியை அமல்படுத்துவதன் மூலம், ரூ.1000 கோடி ரூபாய் அளவுக்கு வரி வசூலிக்க முடியும் என, வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சிக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
ஒரே மாதிரியான வரி என்பது அரசின் கொள்கை முடிவு என்று கூறி, வரியை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாத நிலையில், சென்னை மாநகராட்சி, நிதி நெருக்கடியை சமாளிக்க, வரி வசூலை மட்டும் அதிகப்படுத்த வழி தேடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முதல்கட்டமாக, அனைத்து சொத்துகளும் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதால், மீண்டும் மறு ஆய்வு செய்து, துல்லியமாக வரி நிர்ணயம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த பணி முதல்கட்டமாக சோழிங்கநல்லுார், கோடம்பாக்கம், ராயபுரம் என, ஒரு வட்டாரத்திற்கு ஒரு மண்டலத்தில் துவங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் பணி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, இந்த பணிகள் ஓராண்டு வரை இழுக்கலாம் என, ஊழியர்கள் கூறுகின்றனர்.
Englih Summary:Chennai Corporation review the property tax. The opportunity to increase the income of Rs 1000 crore.