தமிழக அரசு சார்பில் நேற்று முன் தினம் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 58 ஆயிரத்து 835 பேர் பங்கேற்றதாகவும் அவர்களில், 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி நியமன உத்தரவு அளிக்கப்பட்டதாகவும் அரசு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் ஒன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட துறைமுக மைதானத்தில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் நடத்தப்பட்டது.
இந்த முகாமுக்கு வருபவர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், சுங்கச்சாவடி, கிராஸ் சாலை சந்திப்புகளிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அந்தப் பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முகாம் நடைபெற்ற மைதானத்துக்குள் இளைஞர்கள் நுழைந்தவுடன் அவர்களின் கைகளில் வழிகாட்டி காகிதங்கள் வழங்கப்பட்டன. அதில், முகாமில் வேலை அளிக்கும் 358 நிறுவனங்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. தங்களுக்குத் தேவையான நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் சென்றனர்
இந்த முகாம் குறித்து, வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு முகாமில் 58 ஆயிரத்து 835 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 6 ஆயிரத்து 453 பேருக்கு இறுதிப் பணி நியமன உத்தரவுகளும், 10 ஆயிரத்து 642 பேருக்கு தாற்காலிக பணி நியமன உத்தரவுகளும் வழங்கப்பட்டன. திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில் சேர 14 ஆயிரத்து 392 பேர் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து ஆயிரத்து 57 பேர் பதிவு செய்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகளில் 11 பேருக்கு வேலைக்கான அரசு உத்தரவு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
English summary – The State government conducts a special employment camp in Chennai ,17095 persons got offer letter