சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கி வரும் கே.கே.நகர், அசோக்நகர் ஆகிய பகுதிகளையும், ராமாபுரம், நந்தம்பாக்கம் பகுதிகளையும் இணைக்கும் வகையில் புதிய இணைப்புச் சாலை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி விரைவில் டெண்டர் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று வரும் வகையில் எளிய அணுகுசாலை அமைப்பதற்காகவும் நெசப்பாக்கம் அண்ணா பிரதான சாலையையும் ஏரிக்கரை சாலையையும் இணைக்க சென்னை மாநகராட்சியின் சமீபத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த சாலைகளுக்கு இடையில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்துக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. எனவே இணைப்பு சாலை அமைப்பதற்கு தேவையான 4,644 சதுர மீட்டர் நிலத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு குடிநீர் வாரியத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த இடத்திற்கு பதிலாக 4,320 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மாநகராட்சியின் ஏரிக்கரைப் பூங்காவையும், மீள் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2.5 கோடியும் தருவதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதற்கு சென்னை குடிநீர் வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு மாகராட்சி மாமன்றக் கூட்டத்தில், இத்திட்டத்தை நிறைவேற்ற இந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.2.7 கோடி செலவிலான இத்திட்டத்துக்காக விரைவில் டெண்டர் விடப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியபோது, “புதிய இணைப்புச் சாலை 260 மீட்டர் நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். சாலையின் ஒரு புறம் 4 மீட்டரும், மற்றொரு புறம் 2 மீட்டரும் அகலம் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்படும்.
இந்த சாலையில் உள்ள 30 மரங்களை அகற்றாமல் அவற்றை நடைபாதைகளுக்குள்ளேயே வைத்திருக்கிறோம். இரண்டு மரங்கள் மட்டும் வேறு இடங்களில் நடப்படும். இது பேருந்து தட சாலையாக மாற்றப்படும். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்” என்று கூறினார்
English Summary:Chennai K.K.Nagar-Ashok Nagar Connecting New Road Tender Announced Soon.