சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை – விமானநிலையம், சென்டிரல் – பரங்கிமலை வரை 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்துக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. இதனை சராசரியாக ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.
இதற்கிடையே மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டிக்க வேண்டும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலனை செய்த சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடந்த மாதம் ரெயில் கட்டணத்தை சற்று குறைத்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சேவை நேரத்தையும் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது விமானநிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் சென்டிரல் எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி மெட்ரோ ரெயில் சேவை நேரம் காலை 6 மணிக்கு பதிலாக காலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும் இரவு 10 மணிக்கு பதிலாக 11 மணி வரையிலும் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நேரம் நீட்டிப்பு பயணிகளின் வரவேற்பை பொறுத்து 2 வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். அதனைத்தொடர்ந்து முழு அளவில் இந்த சேவை நீட்டிப்புக்கான உத்தரவு வழங்கப்படும்.