சென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், ஆலந்துார், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 36 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தம் வசதி உள்ளன. இவற்றில், 9 நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்த மட்டுமே வசதி இருக்கிறது. பயணிகளின் வாகனப் பாதுகாப்பு மற்றும் ரயில் நிலைய பாதுகாப்புக்காக, அனைத்து வாகன நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட சில முக்கிய மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களில் மட்டுமே கேமராக்கள் உள்ளன. படிப்படியாக அனைத்து மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
கோயம்பேடு மெட்ரோ வாகன நிறுத்தும் பகுதியில் 20 சிசிடிவி கேமராக்கள், ஆலந்துார் மெட்ரோ வாகன நிறுத்தும் பகுதியில் 12 சிசிடிவி கேமராக்கள், நங்கநல்லுார் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் பகுதியில் 16 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 48 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அவற்றை கண்காணித்து, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறினார்.