உலகம் முழுவதும் ஆகஸ்ட் 2ஆம் தேதியான நேற்று ‘உலக நண்பர்கள் தினம்’ சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அதேபோல் சென்னையிலும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் பரிமாறி கொண்டனர்.
1935ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அன்று முதல் அமெரிக்காவில் தொடங்கிய நட்பு தினம் படிப்படியாக இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இந்த நாளை நட்பின் நாளாக கொண்டாட தொடங்கி விட்டார்கள். தன்னுடைய இன்ப, துன்பங்களை பரிமாறிக்கொள்வதற்கு ஒருவருக்கு நல்ல நண்பன் இருந்து விட்டால், அதை விட சொத்து பெரியது இல்லை என்று சொல்வார்கள்.
சென்னை நகர் முழுவதும் நேற்று நண்பர்கள் தின கொண்டாட்டத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நீண்ட காலமாக சந்திக்காமல் இருந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். ஒருசிலர் தங்களது நண்பர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர். தாங்கள் விரும்பிய திரைப்படத்திற்கும் சென்றும் அவர்கள் நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
English Summary : Friendship day celebrated grandly all over Chennai in Merina beach.