சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு நடத்தப்படவுள்ள நுழைவுத்தேர்வு குறித்த தகவல்களை நேற்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தலைவர் பி.சத்யநாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன்படி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், அறிவியல், மேலாண்மையியல் மற்றும் கலையியல் ஆகிய பிரிவுகளில் படிப்பதற்காக மொத்தம் 12 ஆயிரம் சேர்க்கப்பட உள்ளனர். ஆனால் இந்த படிப்புகளில் சேர நாடு முழுவதிலும் இருந்து 2.2 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வெழுத பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இவர்களில் 1.75 லட்சம் பேர் எழுத்துத் தேர்விலும், சுமார் 50 ஆயிரம் பேர் கணினி மூலமும் தேர்வும் எழுத உள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 102 எழுத்துத்தேர்வு மையங்கள் மற்றும் 50 கணினித் தேர்வு மையங்களில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி கணினி வழித்தேர்வு மற்றும் ஏப்ரல் 26-ஆம் தேதி எழுத்துத் தேர்வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 22.7 சதவீதம் பேரும், கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்து 15.2 சதவீதம் பேரும், தென்மாநிலங்களில் இருந்து 50 சதவீதம் பேரும் நுழைவு தேர்வு எழுத இதுவரை விண்ணப்பித்துள்ளதாக சத்யநாராயணன் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபீர் கே.பக்க்ஷி, மாணவர் சேர்க்கை இயக்குநர் ஆர்.முத்துசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

English Summary : Chennai SRM University entrance exam notification