சென்னை மருத்துவக்கல்லூரியில் 2009 – 2015-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்த ஒரு மாணவர் 15 தங்கப்பதக்கங்கள் மற்றும் சிறந்த மாணவருக்கான இரண்டு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 2009 – 2015ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த பேட்ஜில் படித்த 23 வயது எஸ்.விக்னேஷ் என்ற மாணவர் 15 தங்கப் பதக்கங்களையும், சிறந்த மாணவருக்கான 2 விருதுகளையும் பெற்றதோடு கல்லூரியில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 479 மதிப்பெண்களும், பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,183 மதிப்பெண்களும் எடுத்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி என்ற ஊரை சேர்ந்த எஸ்.விக்னேஷ், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அடுத்தக் கட்டமாக மருத்துவ மேற்படிப்பான எம்டி அல்லது எம்எஸ் படித்து முடித்து ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவை அளிப்பதே தனது வாழ்க்கையின் லட்சியம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மாணவர் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
English Summary : 2009 – 2015 year MBBS student has won 15 gold medal and has won two Best Student award.