கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று திடீரென மேகங்கள் திரண்டு சென்னையில் மழை பெய்ததால் சென்னை மக்கள் கோடை வெயிலில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது, குமரிக்கடல் பகுதிக்கும் லட்சத் தீவுகள் பகுதிக்கும் இடையில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்து வருவதாகவும் கூறினர்.

இன்று தென் தமிழகம், வட தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையின் காரணமாக சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 103.6 மி.மீ. மழை பதிவானது. அதேவேளையில் நுங்கம்பாக்கத்தில் 2.6 மி.மீ. மழை மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : For the past few days Summer Sun increased temperature in Chennai and in Tamil Nadu. Yesterday sudden rain results in decrease in temperature.