சென்னை – கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த ரயில், தமிழகத்துக்கு உள்ளே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் ஆகும்.
இந்த ரயில், புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலில் ஏழு ஏசி சேர் கார் பெட்டிகள், ஒரு ஏசி எக்ஸிகியூட்டிவ் பெட்டி என 8 பெட்டிகள் இருக்கின்றன. மொத்தம் 596 இருக்கைகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலின் முதல்நாள் சிறப்பு சேவையாக இயக்கப்பட்டது. மாணவர்கள், ரயில்வே அதிகாரிகள் என பல தரப்பினர் பயணம் மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை நேற்று தொடங்கியது. இந்நிலையில், இந்த ரயிலில் ஒரு வாரம் வரை (ஏப்ரல் 16-ம் தேதி) டிக்கெட்கள் நிரம்பி உள்ளன. சென்னை-கோயம்புத்தூருக்கு ஏசி சேர் கார் (AC Chair Car)வகுப்பு கட்டணமாக ரூ.1,365 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் ஏப்.16-ம்தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
இந்த ரயிலின் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் (AC Executive Chair Car) வகுப்பு கட்டணமாக, ரூ.2,485 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் ஏப்ரல் 23 வரை டிக்கெட் நிரம்பிவிட்டது.
கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் ஆகிய இரண்டு வகுப்பிலும் வரும் 16-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு டிக்கெட் முடிந்து காத்திருப்போர் பட்டியல் நீண்டது. கோடை காலம் என்பதால், இந்த ரயிலின் டிக்கெட் முன்பதிவு வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.