தென்னிந்தியாவில் உள்ள பக்தர்களின் வசதிக்காக ரயில்வே துறை அவ்வப்போது சிறப்பு ரயில்களை முக்கிய ஆன்மீகத் தலங்களுக்கு இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் உள்பட பல ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் சிறப்புச் சுற்றுலா ரயில் ஒன்று வரும் ஜூலை 8ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2014- 2015-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புச் சுற்றுலா, ஆன்மிக யாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி அனைத்து மதத்தினருக்கும் ஏற்ப ஆன்மிக யாத்திரை ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சிறப்பு யாத்திரை ரயில்களிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ரயில்களில் 7 படுக்கை வசதி பெட்டியும், இரண்டு ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு சமையல் அறை பெட்டியும், இரண்டு பவர் கார் என, மொத்தம் 13 பெட்டிகள் இருக்கும்.

ஏ.சி. பெட்டிகளில் 190 பயணிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 510 பயணிகளும், மொத்தம் 700 பயணிகள் சிறப்பு யாத்திரை ரயிலில் செல்லலாம். யாத்திரை முழுவதும் தென்னிந்திய சைவ உணவு தயாரித்து வழங்க தனியே சமையல் அறை பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் சுற்றுலா மேலாளர்கள், பாதுகாவலர்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாத்திரையில் செல்லும் இடம் பற்றிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பயணிகளுக்குத் தெரிவிக்க பொது ஒலிபெருக்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விதிகளுக்குள்பட்டு எல்.டி.சி. வசதி பெறலாம். ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் செல்லும் குரு கிருப யாத்திரை ரயில் ஜூலை 8ஆம் தேதி புறப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோயில், திருவனந்தபுரம் வழியாக செல்கிறது.

யாத்திரை விவரங்கள்:

குரு கிருப யாத்திரை: 7 நாள்கள் ஜூலை 8 முதல் 14-ஆம் தேதி வரை.
ஸ்டேண்டர்டு பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.6,370. இதில் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி. தங்கும் விடுதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. இல்லாத வாகன வசதிகள் அடங்கும்.
கம்ஃபர்ட் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.13,790. இதில் ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டி. ஏ.சி. இல்லாத ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.
டீலக்ஸ் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.18,550. இதில் ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டி, ஏ.சி. ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.

இந்த யாத்திரை குறித்து மேலும் கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 044-64594959, 9840902916, 9003140681 ஆகிய எண்களுக்கும் மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் 9003140714, 9840902915 ஆகிய எண்களுக்கும், காட்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் 9840948484 என்ற எண்ணிற்கும், கோவை பகுதியை சேர்ந்தவர்கள் 9003140680 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Special train has been announced from Chennai Central to Shiradi, Mantralayam, Pandaripuram from July 8th.