கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் இரண்டாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறும் நாட்களான் ஏப்ரல் 9,11,25,28 மற்றும் மே மாதம் 4,8,10, ஆகிய தேதிகளில் வணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், குறைந்த வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் வாலாஜா சாலை, பாரதி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னைப் பல்கலைக்கழக வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்லும் வாகனங்கள் காமராஜர் சாலை, வாலாஜா சாலை வழியில் அரசினர் விருந்தினர் மாளிகை சந்திப்பில் இருந்து அனுமதிக்கப்படும். எம்.சி.சி. வாகன நிறுத்துமிடம் செல்லும் வாகனங்கள் பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியில் அனுமதிக்கப்படும்.
உழைப்பாளர் சிலை சந்திப்பில் காமராஜர் சாலையில் இருந்து வாலாஜா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் அண்ணா சதுக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை சந்திப்பு வரை வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது என்றும் இந்த வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை சந்திப்பு, பாரதி சாலை வழியாக பெல்ஸ் சாலை, வாலாஜா சாலையை அடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்களை, மெரீனா கடற்கரையின் உள்புறச் சாலையில் நிறுத்த அனுமதி உண்டு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Due to IPL, Many Changes in Chennai Traffic rules has engaged from today onwards.