Helmet wearing issue 1_0_0சென்னை நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அவ்வப்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விபத்தில்லாத சென்னை தினமாக நேற்று அதாவது ஜூலை 10ஆம் தேதியை போலீசார் அறிவித்திருந்தனர். இதையொட்டி, காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை (12 மணி நேரம்) மாநகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டனர்.

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை மாநகர சாலைகள் காலை வேளையில் வெறிச்சோடியே காணப்படும். விடுமுறை தினம் என்பதால் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போதுதான் அதிக எண்ணிக்கையில் போலீசார் இருப்பார்கள். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் வழக்கத்துக்கு மாறாக சென்னை மாநகர சாலைகள் காலையிலேயே பரபரப்பாக காணப்பட்டன. மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் போலீஸ் அதிக எண்ணிக்கையில் பணியில் இருந்தனர். மொத்தம் 240 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து ‘‘விபத்தில்லா சென்னை’’யை உறுவாக்க தீவிரமாக கண்காணித்தனர். 2 ஆயிரம் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரையிலும் இந்த சோதனை நீடிக்கும். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், உரிமமின்றி வாகனங்களை ஓட்டியவர்கள் உள்ளிட் டோர் மீதும், போக்குவரத்து விதிகளை மீறி நடந்து கொண்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வாகன சோதனையின் போது துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய வி‌ஷயங்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

1. சாலை பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும்.

2. அனைத்து சாலை விதிகளையும் கடைபிடிக்க வேண்டும்.

3. மது அருந்திவிட்டு கண்டிப்பாக வாகனம் ஓட்ட கூடாது.

4. வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்த கூடாது.

5. இருசக்கர வாகனம் ஓட்டும் போதும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

6. இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது.

7. சாலையில் அதிவேக மாகவோ, ஆபத்தாகவோ வாகனம் ஓட்ட கூடாது.

8. பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சாலையில் வழிவிட வேண்டும்.

9. இளஞ்சிறார்களையோ, உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களையோ தங்களது வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது.

10. தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ‘‘விபத்தில்லா நாள்’’ குறித்த இச்செய்தியை தெரியப்படுத்த வேண்டும்.

என்பது போன்ற 10 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

English Summary: Chennai without an accident. 10 Important advice of Chennai Taraffic police