சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சிறப்பான நடவடிக்கைகளின் மூலம் திறமையாக சமாளித்த சென்னை குடிநீர் வாரியத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இந்த விருதை சமீபத்தில் ஐரோப்பியக் குழுவின் தலைவரும்-போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்தவருமான ஜோஸ் மேனுவல் பரோசோ என்பவர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அளித்துள்ளார்.
சென்னை நகரம் மிகப்பெரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த துரித நடவடிக்கைகளின் காரணமாக சென்னை நகரம் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பியதாகவும், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தினமும் 100 மில்லியன் லிட்டர் அளவில் கடல்நீரை குடிநீராக மாற்றும் நெம்மேலித் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில், ‘தாமரைப்பாக்கம், மீஞ்சூர், பூண்டி ஆகிய இடங்களில் புதியதாக கிணறுகள் அமைத்து தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இருந்து தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கை, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குதல், கோயம்பேடு, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் எதிரிடை சவ்வூடு பரவுதல் முறையில் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும் அமைப்புகளை நிறுவ ஒப்புதல் அளித்தது, இடமறியும் கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் வழங்கியது, பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் 24 மணி நேர அழைப்பு மையம் அமைத்தது என பல்வேறு நடவடிக்கைகள் குடிநீர் வாரியத்தால் எடுக்கப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்-கழிவு நீர் அகற்று வாரியத்துக்கு நீர் தலைமை விருது-2015 அளிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.