சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை வாங்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும் சேப்பாக்கம் கிரிக் கெட் மைதானத்தின் தகவல் தொடர்பு மேலாளர் பாபா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியை காணவந்த ரசிகர்கள் மாலை 6 மணி முதல் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். போலி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டதாக வந்த தகவல்களை அடுத்து ரசிகர்கள் கொண்டு வந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து பரிசோதித்த பின்னரே அனைவரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு சோதனை செய்தபோது சில போலி டிக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

போலி டிக்கெட்டுக்கள் கொண்டுவந்த ரசிகர்களிடம் விசாரணை செய்தபோது மைதானத்துக்கு வெளியே ஒருசிலர் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததாகவும், அவர்களிடம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை கொடுத்து டிக்கெட்டுக்களை பெற்றதாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் போலி டிக்கெட் விற்பனை செய்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஒரிஜினல் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து அவர்கள் விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் தகவல் தொடர்பு மேலாளர் பாபா செய்தியாளர்களிடம் கூறியபோது, “சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாகவும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரசிகர்கள் வேறு யாரிடமும் போலி டிக்கெட்டுக்களை வாங்கி ஏமாற வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English Summary : Fake tickets are produced outside Chepauk stadium so police request not to buy it.