சென்னை நகர மக்களுக்கு ஏற்கனவே கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக் காட்சி சாலை, வள்ளுவர்கோட்டம் உள்பட பல சுற்றுலாதலங்கள் இருந்து வரும் நிலையில் அந்த வரிசையில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள சேத்துப்பட்டு ஏரி விரைவில் முக்கிய இடம் வகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரி 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விஸ்தாலமான பகுதியாகும். இங்கு படகு சவாரி-தூண்டில் மீன்பிடித்தளத்துடன் அழகிய சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி, இப்பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.42 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு, சேத்துப்பட்டு ஏரி சுற்றுலாதலமாக்கும் பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது சேத்துப்பட்டு ஏரியில் முக்கிய பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. நடைபாதையில் அழகிய கற்கள் பதிப்பது, வண்ண- வண்ண செடிகளை நடுவது போன்ற இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரங்களில் சேத்துப்பட்டு ஏரி சுற்றுலா பகுதியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
16 ஏக்கர் பரப்பளவு உள்ள சேத்துப்பட்டு ஏரியில், 12½ ஏக்கர் பரப்பளவு தண்ணீர் உள்ளது. இதில், 8½ ஏக்கர் பரப்பளவில் படகுசவாரியும், 4 ஏக்கரில் தூண்டில் மீன்பிடித்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 4 பேர் பயணம் செய்யும் வகையில் 8 படகுகள் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் அந்த படகுகள் ஏரியில் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைச்சிறந்த நீச்சல் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
ஏ.சி. வசதியுடன் மீன்கள் காட்சி கூட அறையும் கட்டப்பட்டுள்ளது. இதில், உலகில் உள்ள மீன் வகைகள், நண்டு, இறால் உள்பட கடல்வாழ் உயிரினங்கள் குறித்த அரிய தகவல்கள் திரையில் ஒளிப்பரப்பப்படும். இதற்கு கட்டணம் ஏதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
கடல் போன்ற இயற்கை காட்சிகளுடன் குழந்தைகளுக்காக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 66 கார்களும், 100 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பல்டி வாகன நிறுத்துமிடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு யார் வேண்டுமானாலும், கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். வாகன நிறுத்துமிடம் மேல்தளத்தில் மிகப்பெரிய உணவகம் திறக்க ஏற்பாடு நடக்கிறது. சேத்துப்பட்டு ஏரியின் அழகை ரசித்தப்படி இங்கு உணவு அருந்தலாம்.
ஏரிக்கு சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகில் ஒரு நுழைவுவாயிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகில் ஒரு ஒரு நுழைவுவாயிலும் என இரண்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.25 முதல் அதிகப்பட்சம் ரூ.50 வரை விலை நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டு வருகிறது.
தூண்டில் மீன்பிடித்தளத்தில், வெளிநாடுகளில் இருப்பது போன்று ராட்சத தூண்டிலைக்கொண்டு மீன்பிடிப்பதற்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒரு நபர் 4 மீன்களை பிடிக்க ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டணம் நிர்ணயம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிடித்த மீன்களை உடனடியாக ஏரியில் விட்டுவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
மீன்கள் சுவாசிப்பதற்காக ‘ஆக்சிஜன்’ வாயு குழாய்கள் ஏரியில் பதிக்கப்பட்டுள்ளன. மீன்களை துன்புறுத்தினாலோ, உயிரிழந்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏரியை சுற்றிலும் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அழகிய செடிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் ஒருகுறிப்பிட்ட தொகை கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்படும்.
சேத்துப்பட்டு ஏரி என்ற இந்த சுற்றுலாதலம் முதல்வரின் பிறந்த நாளான பிப்ரவரி 24 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.
English Summary: Chetpet Lake becomes new tourist spot in Chennai.