CISF-161115-1
சென்னை ஐகோர்ட்டை நேற்று முதல் பாதுகாக்கும் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (CISF ) ஏற்றுக் கொண்டனர். கடும் சோதனைகளுக்கு பின்னரே வழக்கறிஞர்களும், பொதுமக்களும் சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டுக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து, 650 வீரர்களைக் கொண்டு 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையான முன்வைப்புத் தொகை ரூ.16.60 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நவம்பர் 5-இல் தமிழக அரசு வழங்கியது. இதனையடுத்து சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களையும், உயர்நீதிமன்றக் கட்டடங்களையும் தனித்தனியே பிரிக்க இரும்பு தகடுகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக சுமார் 450 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர், மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த ஐகோர்ட் வளாகம் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) சி.ஐ.எஸ்.எஃப். வசம் கடந்த ஞாயிறு அன்று முறையாக ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நேற்று தங்கள் பாதுகாப்புப் பணியைத் தொடங்கினர். இந்தப் படையினர் அதிகாலை 5 முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 1 முதல் இரவு 9 மணி வரையும், இரவு 9 முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையும் என மூன்று ஷிப்டுகளாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐகோர்ட் வளாகத்தில் மொத்தம் 6 சோதனை மையங்கள் வழியாக நுழைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் அடையாள அட்டை மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். மழை காரணமாக, ஐகோர்ட்டுக்கு வழக்கமாக வருவோரில் பாதிப் பேர் மட்டுமே நேற்று வந்தனர். வழக்குரைஞர்கள் குறைந்த அளவே வந்ததால் ஐகோர்ட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னை ஐகோர்ட்டுக்குள் நுழைய அனுமதி சீட்டு எப்படி பெற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். ஐகோர்ட்டுக்கு வழக்கு காரணமாக வரும் மனுதாரர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதற்காக இந்தியன் வங்கி அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் உள்ள கவுன்ட்டர்களில் புகைப்படத்துடன்கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. மனுதாரர் முதலில் அதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். அத்துடன் அடையாள அட்டையையும் சேர்த்து காண்பிக்க வேண்டும். அதையடுத்து புகைப்படம் எடுக்கப்பட்டு பின்னர் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த அனுமதிச் சீட்டை பெற்ற பின்னர், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உள்ள வாயில்களில் வழியாக ஐகோர்ட்டுக்கு உள்ளே வர வேண்டும்.
English summary-CISF takes over Chennai High Court security