சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று முடிந்த கோயம்பேடு – அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில் கடந்த சனிக்கிழமை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 85 டன் எடை கொண்ட மெட்ரோ ரயில் எஞ்ஜினை வைத்து மேற்கொள்ளப்பட்ட 2 கி.மீ. தொலைவுக்கான சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அந்தப் பாதையில் முழு மெட்ரோ ரயில் சோதனை முறையில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் இரவு பகலாக மிக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை ஒரு பாதையிலும் மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதில், ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மேலும், சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுரங்கப் பாதையில் பணிகள் முழுவதும் முடிந்த இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 90 சதவீதம் ரயில்நிலையப் பணிகள் சுரங்கத்தில் முடிவடைந்துள்ளன. சுரங்கத்தில் 24 கி.மீ. தூரத்துக்கு 19 ரயில் நிலையங்கள் உள்ளன. சுரங்கப் பாதையில் நிலையம் அமையும் இடங்கள்:
முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை மற்றும் சைதாபேட்டை ஆகிய பகுதிகளில் சுரங்க ரயில் நிலையங்களும், இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
சென்னை விமான நிலையம் – எழும்பூர் இடையே 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டியுள்ளது. சுரங்கம் தோண்டுவதில் இருந்து வெளிவரும் மண் தினமும் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரை சேகரிக்கப்பட்டு. திருநீர்மலை அருகே உள்ளே ஓர் இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
English summary-CMRL conducts first underground trial between Koyambedu and Anna Nagar Tower