சென்னை கோயம்பேடு பூ விற்பனை சந்தையின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்புச் சந்தைக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன.
பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைக்கும்போது கரும்பு, மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கும். பண்டிகைக்கு இன்னும் 5 நாள்கள் இருக்கும் நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் சிறப்புச் சந்தைகள் அமைத்து பொங்கல் பொருள்கள் விற்பனையை தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக புதன்கிழமை முதல் கோயம்பேடு பூ விற்பனைச் சந்தை பின்புறம் உள்ள பகுதியில் கரும்பு மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. பண்ருட்டி அருகில் உள்ள சத்திரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கரும்புகள் வர தொடங்கி உள்ளன. சிறப்பு சந்தைக்கு புதன்கிழமை 20 லாரிகளில் கரும்புகள் கொண்டுவரப்பட்டன.
சந்தையில் 20 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை தற்போது ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. மஞ்சள் செடிகள் மொத்த விலையில் 10 செடிகள் கொண்ட கொத்து ரூ.100-க்கும், சில்லறை விலையில் 2 செடிகள் கொண்ட கொத்து ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
அதேபோன்று சாமந்திப் பூ ஒரு முழம் ரூ.10, கதம்ப பூ, கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு பூசணிக்காய் (சுமார் 5 கிலோ) ரூ.70, ஒரு தேங்காய் ரூ.35, மாவிலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.30 முதல் ரூ.60 வரை, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகிறது. சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30-க்கு விற்கப்படுகிறது.