சென்னை: குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் குளிரின் அளவு சரிந்து வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது. வட கிழக்கு பருவமழை நவம்பர் 21ல் துவங்கியது. ஒரு மாதத்தை தாண்டியும் எதிர்பார்த்த மழை பெய்யாததால் தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு வாரமாக நிலவிய வறண்ட வானிலை முடிந்து டிச., 22 முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ‘இந்த லேசான மழை 27ம் தேதி அதிகாலை வரை நீடிக்கும்; அதன்பின் மூன்று நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்’ என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குளிர் காலத்துக்கான குளிரின் அளவும் இந்த வாரம் குறைந்துள்ளது. வால்பாறை ஊட்டி போன்ற இடங்களில் 8 டிகிரி செல்ஷியசாக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்ஷியசாக உயர்ந்துள்ளது. கொடைக்கானலில் 9ல் இருந்து 11 டிகிரி செல்ஷியசாக அதிகரித்துள்ளது. சென்னையிலும் 20லிருந்து 22 டிகிரி செல்ஷியசாக, வெப்பநிலை உயர்ந்து குளிரின் அளவு குறைந்துள்ளது.