அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்டமாக எழுத்து தேர்வு நடத்தி அதன் பின்னர் நேர்காணல் மூலம் பணி நியமனம் நடைபெறவுள்ளது.
அரசு தேர்வு துறை நடத்தும் இந்த பணிக்கான எழுத்து தேர்வு நாளை தமிழகம் முழுவதும் 1800 மையங்களில் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருப்பதற்காக கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார்.
மேலும் ஆய்வக உதவியாளர் தேர்வை மாவட்ட அளவில் கண்காணிக்க இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது தவிர அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய் அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்வு முடியும் வரை அனைத்து மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: All Conditions are ready for Lab Assistant Exams Tomorrow.