சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலை நடைபாதை கடை வைத்திருப்பவர்கள் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த சென்னை நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பூமிநாதன், அன்பரசன், நாகராஜ் உள்பட 180க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில் சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலை ஓரத்தில் கடை வைத்துள்ளதாகவும், குறைவான வருமானம் கிடைக்கும் தங்களுக்கு போலீஸார் பல்வேறு தொந்தரவுகள் கொடுப்பதால் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவின்படி, இதுவரை குழு அமைத்ததாகத் தெரியவில்லை என்றும், எனவே விரைவில் குழு அமைத்து, தங்களுக்கு அடையாள அட்டை வழங்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் தங்கள் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், தியாகராயநகர் உதவி போலீஸ் ஆணையர் பதில் மனு தாக்கல் வேண்டும் என்றும் அதுவரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary : T.Nagar pavement shop owner submitted their petition for an ID card for their shops. Court has order to continue the current state till T.Nagar police submits their reports.