iplimage19416மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் ஐ.பி.எல் போட்டிக்கு மைதானத்தை சீரமைக்க தண்ணீர் தர முடியாது என்று மகாராஷ்டிர முதலமைச்சர் கூறியதை அடுத்து மும்பையில் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது

இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை உள்பட மற்ற அனைத்து மைதானங்களின் பராமரிப்புக்கு குடிநீருக்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏப்ரல் 30-ந்தேதிக்கு பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மே மாதத்தில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்ட இறுதிப்போட்டி உள்பட 4 ஆட்டங்கள், புனேயில் 6 ஆட்டங்கள், நாக்பூரில் 3 ஆட்டங்கள் என்று மொத்தம் 13 ஆட்டங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டங்களை எங்கு, எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து டெல்லியில் நேற்று நடந்த ராஜீவ் சுக்லா தலைமையிலான ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாற்றப்படும் ஆட்டங்களை நடத்துவதற்கு விசாகப்பட்டினம் (ஆந்திரா), ராய்ப்பூர் (சத்தீஸ்கார்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), கான்பூர் (உத்தரபிரதேசம்) ஆகிய 4 மாற்று இடங்களை தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட அணி நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறோம். இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தங்கள் அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்களை நடத்துவதற்கு மாற்று இடமாக விசாகப்பட்டினத்தை தேர்வு செய்திருக்கிறது. எஞ்சிய ராய்ப்பூர், ஜெய்ப்பூர், கான்பூர் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்வு செய்வதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இரண்டு நாள் கால அவகாசம் கேட்டுள்ளது.

மேலும், இறுதிப்போட்டியை பெங்களூருவுக்கு மாற்றவும், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தை கொல்கத்தாவுக்கு மாற்றவும் ஐ.பி.எல். கவுன்சிலிடம் பரிந்துரைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.

English summary : Court Orders echo. Change for IPL final in Bangalore