சென்னை: தமிழகத்தில் 2 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம் கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 14.2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400 முதல் ரூ.450 வரை இருந்தது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை ரூ.896 ஆக உயர்ந்துள்ளது. அதற்கான மானியத் தொகை ரூ.405 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆனால் கியாஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்போது ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். சிலிண்டரை கொண்டு வந்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு சரியாக ரூ.20 அல்லது ரூ.30 கொடுக்க வேண்டி இருக்கிறது. சிலிண்டரின் முழு தொகையை கொடுக்க முடியாமல் ஏழை-எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதில் இன்னொரு சிக்கலையும் வாடிக்கையாளர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு சிலரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் மானியத் தொகை திடீரென்று நிறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த மானிய தொகையை மீண்டும் பெற வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதுகுறித்து கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூறுகையில், “ஏழை நடுத்தர மக்கள் சுமார் ரூ.900 கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்குவதில் சிரமம் உள்ளது. அதன்பிறகு வங்கி கணக்கிற்கு வரும் மானிய தொகையை எடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே வங்கியில் மானியம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சிலிண்டர் விலையை குறைத்து ரூ.400-க்கு வழங்க வேண்டும்” என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *