இன்று எம்ஜிஆர் நினைவு நாள். தமிழக மக்களின் இதய தெய்வமாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் நினைவு தினம் இன்று. தமிழ் சினிமாவின் மூலம், தமிழக மக்களின் இதயங்களில் வாழ்த்து வந்த எம்.ஜி.ஆர். அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து, அங்கும் தனது முத்திரையை பதித்து சென்றிருக்கிறார்.
திரையுலகில் புரட்சி நடிகராக களம்புகுந்த எம்ஜிஆர் தனது நடிப்பு மற்றும் ஏழைகள் மற்றும் பெண்களுக்கு உதவுவது. விவசாயி போன்ற கதாபாத்திரங் களில் நடித்து உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்து இதயக்கனியாக என்றும் நிலைத்து நின்று வருகிறார்.
அதனால்தான் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டு களுக்கு மேலாகியும், இன்றும் தமிழக மக்களால் பேசப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரது மறைவு கேட்டு தமிழக மக்கள் கண்ணீர் விட்டு கதறினர். அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவாலயமும் கட்டப்பட்டு உள்ளது. இன்று அவரது 31வது நினைவு நாள் அதிமுகவினரால் மாநிலம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர்.
தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், தான் ஆட்சிக்கு வந்ததும், பள்ளிக்குழந்தைகள் பசியால் வாடக்கூடாது என்று, சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தினார்.
காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டத்தை செம்மைப் படுத்தி,இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத வகையில் முதல மைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார். சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப் பட்டது. இந்த திட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
அன்று முதல் இன்றைய அரசியல் கட்கிகள் வரை அவரது பெயரை சொல்லாமல் தமிழகத்தில் ஓட்டு வேட்டையாட முடியாத சூழல்தான் தற்போது வரை நிலவி வருகிறது. இதிலிருந்து எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருப்பதை நாம் அறிய முடியும். இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்! எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.