பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ரயில்களை இயக்குவது தெற்கு ரயில்வேயின் வழக்கம். இந்நிலையில் வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து நவம்பர் 9ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ஏற்கனவே ரயில்வே துறை அறிவித்திருந்தது. இந்நிலையில்
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று மந்தமாகவே இருந்தது. டிக்கெட் கவுண்ட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளி சிறப்பு ரெயில்கள் குறித்து பயணிகள் இன்னும் அறியவில்லை என்று கருதுகிறோம். பண்டிகை காலத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் தீபாவளி ரெயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவின் தொடக்க நாளிலேயே பயணிகள் ஒருசிலரே வந்திருந்தனர். அடுத்த நாட்களில் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தற்போது பல பயணிகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து கொள்வதால், கவுண்டரில் முன்பதிவு செய்வது வெகுவாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு ரயில்களில் காலியாகவுள்ள இடங்கள் குறித்த விபரங்கள்
9-ந் தேதி காலை 10.15 மணிக்கு எழும்பூர்-கோவை சிறப்பு ரெயிலில் (வண்டி எண்:06111) படுக்கை வசதியில் 172 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 40 இடங்களும் காலியாக உள்ளன. மறுமார்க்கத்தில் இந்த ரெயிலில் (06112) படுக்கை வசதி 95 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 37 இடங்களும் காலியாக உள்ளன.
9-ந் தேதி பாட்னா-நாகர்கோவில் சிறப்பு ரெயிலின் (06115) படுக்கை வசதி 300 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 22 இடங்களும் காலியாக உள்ளன. 7-ந் தேதி நாகர்கோவில்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயிலில் (06117) படுக்கை வசதி 476 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 86 இடங்களும் காலியாக உள்ளன. மற்ற சிறப்பு ரெயில்களிலும் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
English summary-Special trains will be run to clear the extra rush of passengers for Deepavali festival.