டெல்லி உள்பட ஒருசில வட மாநிலங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் காரணமாக டெல்லியில் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த காய்ச்சல் மற்ற மாநிலங்களில் பரவாமல் தடுக்கும் முயற்சியில் சுகாதாரத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயில் பயணிகள் மூலம் தமிழகத்தின் இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதார துறை ஆகியவை இணைந்து டெங்கு பரிசோதனை முகாமை நடத்தி வருகிறது. டெல்லியில் இருந்து சென்னை வரும் ரெயில் பயணிகளுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? என்று நேற்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசு வினியாகம் செய்யப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி மண்டல நல அலுவலர் சுகன்யா தேவி கூறுகையில், ‘‘டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு டெங்கு அறிகுறி உள்ளதா? என்று சோதனை நடத்தி வருகிறோம். டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவுவதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தேங்காய் ஓடு, டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தேங்கும் நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவுவதால், வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.’’ என்று கூறியுள்ளார்.
English Summary:Dengue Camp at Chennai Central Railway Station.