டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி இருக்கக் கூடாது, கழிப்பறைகளை சுத்தமாக வைக்க வேணடும், தரமான குடிநீர் வழங்க வேண்டும், காய்ச்சல் குறித்தும், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் காலை வணக்க கூட்டத்தில் விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெங்கு, வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, தண்ணீர் தேங்குவதை தடுப்பது, பள்ளி வளாகத்தில், குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டிகள் மூடி வைத்திருத்தல், மாணவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி தெரிந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது.
மாணவர்களுக்கு சுகாதாரமாண குடிநீர் வழங்குவதுடன், டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.