தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இதுவரை 283 இடங்களில் உற்பத்தியாகிறது என்று பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மற்றொருபுறம் ஆய்வுப் பணிகளை மேலும் விரிவுபடுத்தி நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைக் கண்டறிந்து வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் அத்தகைய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிகிச்சை கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்யும் பணியையும் பொது சுகாதாரத்துறை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் 8,733 பகுதிகளில் கொசுக்கள், லாா்வாக்கள் சேகரிக்கப்பட்டு, பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அவற்றில் 283 இடங்களில் டெங்கு காய்ச்சலைப் பரப்பக் கூடிய கொசுக்கள் உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

கொசுக்களில் எந்த வகை தீநுண்மி (வைரஸ்) பாதிப்பு உள்ளன என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலிருந்தும் 15 நாள்களுக்கு ஒருமுறை குறைந்தது 7 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதில் டெங்கு பாதிப்புக்கான தீநுண்மி இருந்தால், அவை தனியே பிரிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலில் உள்ள 4 வகைகளில் எந்த வகை என்பது கண்டறியப்படும். இதன் மூலம் அந்தக் கொசுக்கள் மூலமாக மனிதா்களுக்கு பாதிப்பு பரவலாக ஏற்படுவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். கடந்த ஆண்டில் 14,212 இடங்களில் இருந்து கொசுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் 579 பகுதிகளில் டெங்கு கொசுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *