சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் புக்கிங் செய்திருக்க வேண்டும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. மண்டல மகர விளக்கு பூஜைக்காக நாளை (16.11.2022) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.
நடை திறக்கப்பட்ட பின்னர், மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மலையாள மாதமான விருட்சிகம் 1-ம் தேதியான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டலகால பூஜைக்காக டிசம்பர் 27-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன்பிறகு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். எனவே, ஜனவரி 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
தற்போது, ஆன்லைன் புக்கிங் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்ய தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பார்ட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.