Dial_104_05050தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் தேர்வு முடிவு குறித்த அச்சம் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளது. தேர்வு முடிவு குறித்த அச்சத்த்தை போக்குவதற்கு தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைத்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், அச்சம், மன அழுத்தம் ஆகியவைகளுக்கு ஆலோசனை அளிக்க இலவச தொலைபேசி சேவையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.

இந்த அமைப்பில் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்க 25 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பிரிவுகளாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பணிபுரிவார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் உளவியல் மருத்துவர், இரண்டு உளவியல் நிபுணர்கள், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

வரும் 7ஆம் தேதி பிளஸ் 2 முடிவுகளும், அதனை அடுத்து சிபிஎஸ்இ முடிவுகளும், மே 21ஆம் தேதி பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளன. எனவே இந்த உளவியல் குழு மே மாத இறுதி வரை செயல்படும் என்றும், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் உளவியல் ஆலோசனைகள் இந்தச் சேவை மூலம் வழங்கப்படுகின்றன என்றும் 104 சேவை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.