தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் ஆரம்பித்துவிட்டது. முதல்வர் வேட்பாளர்களான ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி உள்பட நூற்றுக்கணக்கானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இணையதளம் மூலம் வேட்பாளர்களின் தகவல்களை வாக்காளர் அறிந்து கொள்ளலாம் என்றும் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் அடிப்படை தகவல்கள் மற்ரும் சொத்து மதிப்பு ஆகியவற்றை உடனுக்குடன் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், பெரும்பாலான தேர்தல் அலுவலர்கள் வேட்புமனு தாக்கல் மாலை 3 மணிக்கு முடிந்த பின்னரும், வேட்பாளர்களின் அடிப்படை தகவல்களை பதிவேற்றம் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், பிரமாணப் பத்திரங்களையும் பதிவேற்றம் செய்வதில் தாமதம் செய்து வருவதால் இணையதளம் மூலம் வேட்பாளர்கள் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary : People facing difficulty knowing information about contestants through online.