உயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் சேர்க்கையின்போதே மாணவர்களிடம் முன்பணமாக வசூலிக்கக் கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
உயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் சேர்க்கையின்போதே மாணவர்களிடம் இருந்து முன்பணமாக கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. மாணவர்களின் உண்மையான கல்வி சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் வாங்கி வைத்து கொள்ளக் கூடாது. கல்வி நிறுவனங்களில் சேர்ந்ததில் இருந்து 15 நாள்களில், அக்கல்வி நிறுவனத்தில் பயிலும் முடிவை மாணவர்கள் கைவிடும்பட்சத்தில், அவர்களிடம் பெற்ற கட்டணம் முழுவதையும் திருப்பி அளித்துவிட வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், உண்மையான கல்வி சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங்களிடம் வைத்து கொள்வதற்கு தடை விதித்தும், மாணவர்களிடம் இருந்து பெற்ற கல்வி கட்டணம் முழுவதையும் திருப்பி அளிப்பது தொடர்பாகவும் பல்கலைக்கழக மானியக் குழு ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டு விட்டது. புதிய வழிகாட்டுதல்கள் மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை படிவத்துடன் கல்வி தொடர்பான உண்மையான சான்றிதழ்களை மாணவர்கள் இனிமேல் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றார்.
இந்த புதிய வழிகாட்டுதல்கள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளுக்கு பொருந்தும்.
உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களிடம், ஆரம்பத்திலேயே முழுக் கட்டணமும் முன்பணமாக வசூலிக்கப்படுவதாகவும், உண்மையான கல்வி சான்றிதழ்கள் பெறப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையிலேயே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.