சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதி பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்து வரும் ஆவின் சேவையை மேலும் மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளின் காரணமாக தற்போது சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் கொள்முதல் அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் 31 கோடியே 29 லட்சம் செலவில் நுகர்வோர் நலமையம் அடங்கிய புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுகிறது.
மேலும் சென்னை விருகம்பாக்கத்தில் ஆவின் டிரைவ்-இன் பாலகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 24 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த டிரைவ்-இன் பாலகத்தில் குளிர் சாதன வசதியுடன் பொதுமக்கள் உட்கார்ந்து சாப்பிடவும் வசதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுடன் வரும் வாடிக்கையாளர்களின் வசதிகளுக்காக குழந்தைகள் விளையாடுவதற்கு உபகரணங்களுடன் சிறுவர் பூங்கா, நடைப்பயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன பாலகத்தில் ஆவின் ஐஸ் கிரீம்கள், பால் பொருட்கள், பீசா, பர்கர், சான்ட்விச், பிரஞ் பிரை போன்றவை கிடைக்கும். டிரைவ்-இன் பாலகத்தில் வாகனங்களை நிறுத்தும் வசதியும் இலவச வை-பை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதில் 50 கார்கள் மற்றும் 200 இரு சக்கர வண்டிகள் நிறுத்துவதற்காக வசதியும் உள்ளது.
விருகபாக்கத்தில் மட்டுமின்றி சென்னையின் முக்கிய பகுதிகளான பெசன்ட் நகர், திருவான்மியூர், வண்ணாந்துறை, அசோக் பில்லர், வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, மைலாப்பூர், தேனாம்பேட்டை (எஸ்.ஐ.இ.டி.) ஆகிய இடங்களிலும் டிரைவ்-இன் நவீன பாலகங்களை அமைக்கும் பணியும் நடந்து வருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பணிகளை அமைச்சர் ரமணா அவர்கள் பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
English Summary:Drive in Aavin Store in Chennai Virugambakkam.