தமிழ்நாட்டை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23க்கான பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி அளவில் மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய மற்றும் மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இத்திட்டம் ரூ3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை நடத்த தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.ஆறு செயல்பாடுகளில் தலா 25 மாணவர்கள் என மொத்தம் 150 மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் வழிகாட்டி ஆசிரியர்கள் தலா 5 என்று மொத்தம் 30 ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களின் விவரத்தை பெற்றோருக்கு தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று ஏப்ரல் 13க்குள் (நாளைக்குள்) அனுப்பி வைக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.