சென்னை நகரின் முக்கிய அடையாளங்களின் ஒன்றும், ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றுமான சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், கடந்த சில நாட்களாக சென்னையில் ஏற்பட்டு வரும் வெள்ளம் காரணமாக நீரில் மிதப்பதாகவும் இதனால் வருடம் முழுவதும் இயங்கி வந்த இந்த நூலகம், கடந்த 2-ஆம் தேதி முதல் வாசகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கடந்த 15 நாட்களுக்கும் மேல் பெய்து வரும் கனமழையால், சென்னையின் உள்ள அனைத்துப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகமும் இந்த வெள்ளத்திற்கு தப்பவில்லை. அரசு அருங்காட்சியகமும், கன்னிமாரா நூலகமும் இணைந்த அந்தப் பகுதியே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. அருங்காட்சியகத்தின் பின்புறம் உள்ள குளம் நிரம்பி வழிந்து, நூலக வளாகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு அடிக்கு அளவுக்குத் தண்ணீர் நிற்பதாகவும், நூலகத்தின் வாசலும் நீரில் மூழ்கி, தரைத்தளத்தில் தண்ணீர் பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் வெள்ள நீர் முழுமையாக வடிந்த பின்னரே வாசகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினர்.
தற்போது நூலகத்திற்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த கட்டிடம் மிகவும் பழையக் கட்டடம் என்பதால் மின் வயர்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தாங்கள் கவனமுடன் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் கன்னிமாரா நூலகம் வாசகர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary-Chennai floods ,Egmore kannimara library status