தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் அதாவது நாளையுடன் முடிகிறது. மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 16-ம் தேதி மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்புகள் நடத்துவதற்கும், முடிவுகளை வெளியிடுவதற்கும் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க, பாம.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவுகள் குறித்து தற்போது பார்ப்போம்:
* சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது பங்கேற்கவோ கூடாது.
* தேர்தல் விளம்பரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை போன்றவற்றின் மூலம் வெளியிடக் கூடாது. குறுஞ்செய்தி-இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புக்கும் இது பொருந்தும்.
* பொதுமக்களை ஈர்க்கின்ற வகையில், இசை நிகழ்ச்சியோ திரையரங்கச் செயல்பாடோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சியையோ நடத்தி அதன்மூலம் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. இந்த விதியை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
* வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சியினர், அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
* சமுதாயக் கூடம், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாள்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிகள், சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது.
* சனிக்கிழமை மாலை 6 மணி முதல் வரும் திங்கள்கிழமை (மே 16) மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை நடத்தவும், வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது.
* ஏப்ரல் 4ஆம் தேதி காலை 7 மணி முதல் மே 16ஆம் தேதி மாலை 6.30 மணி வரையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary : Election campaign ends tomorrow.