சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூடும் கூட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். இந்நிலையில் காவல்துறை அனுமதி பெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு மட்டுமே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் கூறியிருப்பதாவது: ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தவிர வேறு எந்தப் பொருள்களையும் வைக்கக் கூடாது. அவசர சேவையின்போது நோயாளி, நோயாளியுடன் வருபவர்களில் இருவர், மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஆகியோர் மட்டுமே வாகனத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். நோயாளியுடன் வருபவர்கள் ஆம்புலன்ஸில் ஏறும் சமயத்தில் தேர்தல் சம்பந்தப்பட்ட சாதனங்களையோ, பிரசாரம் சம்பந்தப்பட்ட சாதனங்களையோ உடன் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கும் ஓய்வு அறைகளில் அதிக அளவில் பணத்தையோ, அதிக மதிப்புமிக்க உடைமைகளையோ வைத்திருக்கக் கூடாது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஓய்வு அறைகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியை அவசர சேவை காலங்களில் சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். காவல்துறையிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ள கட்சிக் கூட்டங்களுக்கு, பேரணிகளுக்கு அவசரகால ஊர்தியாக மட்டுமே ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

நோயாளிகளை அழைத்துச் செல்லும்போது, அதிகாரிகள் யாராவது சோதனையிட வலியுறுத்தினால், நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்த பின்பே சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Election code of conduct affects ambulance service.