மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நுகர்வோர் நம்பி ஏமாற வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது. மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுப்புவது போன்று போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதைக் காணும் நுகர்வோர் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்-ல் சென்று பார்க்கும்போது, அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் பறித்துக் கொள்கின்றனர்.
இது குறித்து, மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்களுடைய மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை குறித்து மின் வாரியத்தின் இணையதள பக்கத்தில் சென்று சரி பார்க்க வேண்டும்.
குறுஞ்செய்தியில் உள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டாம். மேலும், இது குறித்து 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.