கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்கலாம் என நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20 இன் படி கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்றுகள் இன்றி மின் இணைப்பு, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளிட்ட முதலான இணைப்புகளை வழங்கலாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, கட்டட முடிவு சான்றிதழ்கள் பெறுவதற்கு முன்னதாகவே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 12 மீட்டர் உயரமுள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர்(8,070 சதுர அடி) பரப்பளவிற்கு உள்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இதுபோன்ற அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த இணைப்புகளை வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.