சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் நிகழ் கல்வியாண்டில் (2018-19) பிளஸ் 2 மாணவர்கள் சேருவதற்கு உரிய தகுதி மதிப்பெண்ணை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் குறைத்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 பாடப் பிரிவில் உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகிய அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களிடமிருந்து சித்த மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எனினும், உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அறிவியல் பாடங்களில் கூட்டு மதிப்பெண் தற்போது வகுப்பு வாரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில், மேலே குறிப்பிட்ட பட்டப் படிப்புகளில் சேர வரும் 29-ஆம் தேதி முதல் வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பாடங்களில் குறைக்கப்பட்ட கூட்டு மதிப்பெண்கள் விவரம்: 1. பிற்படுத்தப்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவினர்-45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை; 2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்-40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை; 3. பட்டியல் இனம் (எஸ்.சி.) அல்லது பட்டியல் இனம் (அருந்ததியினர்-எஸ்சிஏ)–35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை; 4. மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.) அல்லது பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்-ஒவ்வொரு பாடத்திலும் (உயிரியல், வேதியியல், இயற்பியல்) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் பெற: குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை, பாளையங்கோட்டை உள்பட பல இடங்களில் உள்ள இந்திய மருத்துவ முறை கல்லூரிகளின் முதல்வர்களிடம் வரும் 29-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக் குழு அலுவலகத்திலோ விண்ணப்பப் படிவம் வழங்கப்பட மாட்டாது.

இணையதளத்தில்: விண்ணப்பத்தை சுகாதாரத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் அனுப்பலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்தோர்: அறிவியல் பாடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் கூட்டு மதிப்பெண் பெற்று சித்த மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தோர் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *