வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கத் தவறியோருக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையாளர் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையைப் பெற விரும்பும் நபர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (அக்.25) இருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 2011 -ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தனது உத்தரவில் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.