Anna-universityஏப்ரல் 15 முதல் அதாவது நேற்று முதல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம்தான் முதல்முதலாக முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மூலம் விண்ணப்பம் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளிலேயே அண்ணா பல்கலையின் இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலை மூலம், தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் விண்ணப்பம் வழங்கும் முறை முதன்முதலாக ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலமே பதிவு செய்து, அதை பிரதி எடுத்து அண்ணா பல்கலையில், தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, நேற்று முன்தினம் வெளியான நிலையில் நேற்று முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை முதல், இணையதளத்தில் பதிவு செய்ய முயற்சி செய்தனர். ஆனால், பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளம் செயல்படவில்லை. தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் இணையதள பதிவுக்கு முயற்சித்து கொண்டே இருந்தனர். ஆனால், மாலை, 6:00 மணிக்கு பின்னரே இணையதளம் செயல்பட்டது.

நுாற்றுக்கணக்கான மாணவர்கள், அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பம் வாங்க முயன்றனர். ஆனால், ‘நேரில் விண்ணப்பம் வழங்கப்படாது’ எனக்கூறி, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலை அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல் நாளில் ஏராளமானோர் விவரங்களைப் பதிவு செய்ய முயற்சித்திருப்பதாலேயே, இணையதளம் முடங்கியிருக்கலாம். இந்தச் சிக்கலை போக்கும் வகையில், பல்கலைக்கழக இணையதள திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மாணவர்கள் எந்தவித சிக்கலுமின்றி விண்ணப்பிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதாவது, இணையதள இணைப்புடன் 20 கணினிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட உள்ளன. விண்ணப்பதரார்கள் இந்த வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

பொறியியல் படிப்புகளுக்கான, ‘ஆன்லைன்’ விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. பொதுவாக, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பு கலந்தாய்வு முடிந்த பின்னரே பொறியியல் படிப்பு கலந்தாய்வு துவங்கும். ஆனால் மருத்துவ படிப்பு விண்ணப்ப விநியோகம் குறித்து, முறையான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என, மருத்துவ படிப்பில் சேர ஆர்வமுடன் உள்ள மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், ‘விண்ணப்ப வினியோகம் குறித்த விவரம், ஓரிரு நாளில் வெளியாகும்’ என்றனர்.

English summary : Engineering application online. Inactive first day Anna University web