கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி போட்டு வரும் நிலை இருந்தது. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பொறியியல் பட்டம் முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்ததாலும், ஒருசில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளின் மோகம் குறைந்து வருகிறது. பல பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகம் இருப்பதால் பல கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாணவர்களுக்கு அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்கு வந்துள்ள நிலையில் புதியதாக கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. 2016-17ஆம் கல்வியாண்டில் புதிய கலைக் கல்லூரிகள் தொடங்க, 54 விண்ணப்பங்கள் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கணினி அறிவியல் உள்பட பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே வெகுவாகக் குறைந்து வருவதால் 013-14ஆம் கல்வியாண்டு முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் இடங்கள் மாணவர் சேர்க்கையின்போது, காலியாகவே இருந்து வருகின்றன. இதனால், பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், கலை-அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் 2013-14ஆம் கல்வியாண்டில் 565 பொறியியல் கல்லூரிகளில் 2,83,715 பொறியியல் இடங்கள் இருந்தன. இவற்றில் 1,77,110 இடங்களிலே மாணவர் சேர்ந்தனர். 1,06,605 இடங்கள் காலியாக இருந்தன.
2014-15ஆம் கல்வியாண்டில் 572 பொறியியல் கல்லூரிகளில் 2,94,484 இடங்களில் 1,61,756 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,32,728 இடங்கள் காலியாக இருந்தன.
2015-16ஆம் கல்வியாண்டில் 533 கல்லூரிகளில் 2,85,254 இடங்களில் 1,59,042 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,26,212 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில் 2013-14ஆம் கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகளும், 2014-15ஆம் கல்வியாண்டில் 12 கல்லூரிகளும், 2015-16ஆம் கல்வியாண்டில் 12 கல்லூரிகளும் மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “2015-16ஆம் கல்வியாண்டில் கல்லூரியை மூட 30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுச் சென்றன. இவர்களில் சிலர் தாமதமாக ஏ.ஐ.சி.டி.இ.யிடம் விண்ணப்பித்திருந்தால், தாமதமாக அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.
2016-17ஆம் கல்வியாண்டிலும் பல கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏராளமான கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலும் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.
கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்: இவ்வாறு பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், 2011-ஆம் ஆண்டு முதல் கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துவருகிறது. இதனால், புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வமும் கல்வியாளர்களிடையே அதிகரித்து வருகிறது.
2015-16ஆம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 60 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதுபோல் 2016-17ஆம் கல்வியாண்டுக்கும் இதே எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளன.
English summary: Engineering colleges in the state will be closed. What is the reason