சென்னை உயர்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் வழக்கறிஞர் போல நடித்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நெய்வேலியை சேர்ந்த முகுந்தன் என்பவருக்கு சொந்த பிரச்சனை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வருகிறது. அவரிடம் எஸ்.எஸ்.செந்தில் என்பவர் சமீபத்தில் அறிமுகமாகி தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாகவும், முகுந்தனின் வழக்கை நடத்தி தருவதாகவும் கூறி ரூ.5 லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால் செந்திலின் நடவடிக்கைகளை கவனித்த முகுந்தனுக்கு சந்தேகம் வர, அவர் உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் வந்து விசாரித்தபோது செந்தில் வழக்கறிஞரே இல்லை என்ற உண்மை தெரிய வந்தது
இதுகுறித்து உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் முகுந்தன் புகார் செய்தார். அவருடைய புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றிய எஸ்.எஸ்.செந்திலை பிடித்து போலீஸார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அண்ணா நகர் 6-வது அவென்யூ, 8-வது தெருவில் வசிப்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் மீது ஆள்மாறாட்டம் செய்தல், பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
English Summary: Fake lawyer arrested in Madras High Court.