fire-dept-28102015
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தீவிபத்துக்கள் ஆகியவற்றை தடுக்கும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை செய்ய திட்டமிட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பாக பட்டாசுகளை பயன்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை நகரில் மிக உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள் வணிக வளாகங்கள் மற்றும் குடிசை பகுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து பட்டாசு விபத்துகளை தடுக்க கூடிய வழிமுறைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த தீயணைப்பு துறை முடிவு செய்துள்ளது. இதன்படி பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவமனைகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள், குடிசைப்பகுதி நிறைந்த பகுதிகள் ஆகிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது உற்சாகத்தினாலும், கவனக் குறைவாலும் ஏற்படும் தீவிபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக சென்னை நகரில் தீயணைப்பு படை வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக சென்னை நகரில் மட்டும் 1200 படை வீரர்களை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குனர் (வடக்கு மண்டலம்) விஜய சேகர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “இந்த தீபாவளி பண்டிகையை விபத்தில்லாத பண்டிகையாக கொண்டாட அனைவரும் உறுதியேற்போம். பாதுகாப்பாக பட்டாசுகளை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். சென்னை நகரில் தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக தீயணைப்பு துறை பாதுகாப்பு பணிகளில் முழு வீச்சில் இறக்கப்படும். பண்டிகைக்கு அடுத்த நாள் வரை இந்த பணி தொடரும். பாதுகாப்பு பணியில் சென்னையில் இருந்து 1000 தீயணைப்பு படை வீரர்களும் வெளி மாவட்டத்தில் இருந்து 200 வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் 80 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் விபத்தை தடுக்கவும் இது தவிர பிற மாவட்டத்தில் இருந்து 27 தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 107 வாகனங்களும் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தடைந்த அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வாகனம் விரைந்து சென்று தீ தடுப்பு மற்றும் மீட்பு பணியில் இறங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
English summary-Tamil Nadu Fire and Rescue services gears up for Diwali