சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. குறிப்பாக செம்பரப்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 5000 கன அடியாக அதிகரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஏரியின் பாதுகாப்பு கருதி, இரண்டு நாட்களுக்கு முன் அதிகபட்சமாக 18 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் அடையாற்றில் விடப்பட்டது. இதனால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. முன்னதாக சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாநகராட்சியின் கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த பொதுமக்கள் இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
தற்போது மழை ஓரளவு குறைந்தவிட்டதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதனால், உபரி நீர் வெளியேற்றம் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. ஆற்றில் விடப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், ஆற்றில் ஓடும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வந்தது. ஒரு சில தினங்களில் கரையோரம் உள்ள வீடுகளில் இருந்து நீர் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை நீடித்ததால், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 5,222 கன அடியாக உயர்ந்தது. இதனால், தற்போது, ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது
English summary-Flood in Adyar river due to heavy rains